திருவண்ணாமலை தீபத்திருவிழா..என்னென்ன ஏற்பாடுகள்.. அதிகாரிகளுடன் இறையன்பு ஆலோசனை



திருவண்ணாமலை தீபத்திருவிழா..என்னென்ன ஏற்பாடுகள்.. அதிகாரிகளுடன் இறையன்பு ஆலோசனை 

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார். 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும் நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மலையே சிவமாக காட்சி தரும் இடம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை ஆலயம். மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வணங்குவார்கள்.

இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் அனுமதிக்கப்படாத தீபத்திருவிழாவாக பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இந்தாண்டு திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திகை தீப திருவிழா

இந்த ஆண்டு தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி காலையில் பரணி தீபமும் மாலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழாவில் பங்கேற்கவும் கிரிவலம் வரவும் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அப்படி வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் கடந்த வாரம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

அமைச்சர் சேகர் பாபு

அந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு வி.ஐ.பி.கள் வருகையின் போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்ந்து விடுகிறார்கள். அது நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அம்மனியம்மன் கோபுரம், பேகோபுரம், ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் உள்ளே வருகிறார்கள். இங்கே டிக்கட் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என எல்லோரும் குவிவதால் நெரிசல் ஏற்படுகிறது. அதனால் அதனை ஒழுங்குபடுத்த வரிசை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

100 மருத்துவ குழுக்கள்

கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 15 மருத்துவக்குழுக்கள் செயல்படும் எனச் சொல்லியுள்ளார்கள். 40 லட்சம் பக்தர்கள் வரும் விழாவிற்கு 15 பத்தாது, 100 மருத்துவக்குழுக்கள் உருவாக்குங்கள் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். காலை முதல் வேலை பார்க்கும் காவலர்கள் தீபம் மலையில் ஏற்றி முடித்ததும், போதும் என சோர்ந்து விடுகிறார்கள். இதனால் வாகனங்கள் செல்வதும், போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுகின்றன. அது நடக்காமல் காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

நவம்பர் 27ல் கொடியேற்றம்

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா இம்மாதம் 24ஆம் தேதி ஊரின் காவல் தெய்வமான துர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி 27ஆம் தேதி அண்ணாமலையார் கருவறையின் முன்பாக உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி அண்ணாமலையார் கருவறையின் முன்பாக அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
ஆலோசனை

இறையன்பு
இதனிடையே கார்த்திகை தீப திருவிழாவிற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இறையன்பு ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

Love Shiva

Gpd shiva